தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை “என் மண் – என் மக்கள்’ என்ற பெயரில், ராமேஸ்வரத்தில் இன்று(ஜூலை 28) பாதயாத்திரையை துவக்குகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜக சார்பில் சில இடங்களில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் பாட்ஷா மற்றும் திருச்சி சி.எஸ்.ஐ. பிஷப் சந்திரசேகரன் ஆகியோர் படங்களுடன், ‘2026ம் ஆண்டின் முதல்வர்’ என்ற வாசகத்துடன் வரவேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த போஸ்டர் குறித்து சிஎஸ்ஐ பிஷப் சந்திரசேகரன் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் – இதில் பாஜக சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த ஒரு சிலர் தனக்கு வந்து பொன்னாடை போர்த்தியதாகவும் தன்னை கேட்காமலே புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாகவும் விளக்குகிறார். தான் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்வதாக அவர்கள் ஒட்டி உள்ள இந்த போஸ்டருக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.