ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை…
திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் மீட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்
ஸ்ரீரங்கத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீரங்கம் பஞ்சகரை அருகே வந்த சில மர்ம நபர்கள் தேவராஜனை வழிமறித்து தாக்கி, அருவாளால் அவரை கொலை செய்ய முயற்சிததுள்ளனர். அதோடு தேவராஜனை தாக்கியதை தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தேவராஜ் பலத்த காயம் அடைந்தார். இந்த தாக்குதல் குறித்து திருச்சி உத்தமர் கோயில் செயல் அலுவலரும், லால்குடி தண்டன்கோரை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் பொறுப்பாளருமான புனிதா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர், முதல் கட்ட விசாரணையில் லால்குடி தண்டன்கோரை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் அவருடைய கூட்டாளியான மற்றொருவரும் முன்பகை காரணமாக தேவராஜனை தாக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு..
திருச்சி, புத்தூர் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் தருண் (22). இவர் அப்பகுதியில் உள்ள சாந்தி ( 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அந்த இளம் பெண் தருனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி அந்த இளம் பெண் புத்தூரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றபோது அங்கு வந்த தருண், இளம் பெண்ணை வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நகை பட்டறை உரிமையாளர் மாயம்
திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 52. இவரது உறவினர் சிவகுமார் 29 . இவர் பெரிய கடை வீதி சுண்ணாம்புகாரன் தெருவில் நகை பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி கடையிலிருந்து சென்ற சிவகுமார் மாயமானார் இதுகுறித்து அவரது உறவினர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் கொட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிக்கன்- முட்டை குழம்பு -பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் பலி…. திருச்சியில் பரிதாபம்..
திருச்சி பழைய பாஸ்போர்ட் ஆபீஸ் பின்புறம் உள்ள நரசிம்மன் நாயுடு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி மெரினா 33. இவரது மகன் ஆலன் ரெனிஷ் 11. இவர் உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி இரவு ஆலன் ரெனிஷ் சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு பயங்கர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திடீரென இரவு வாந்தி எடுத்துள்ளார். அவரை ஜனவரி 6ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆலன் ரெனிஷ கடந்த ஜனவரி 8ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் மகேஸ்வரி மெரினா அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் மனைவி தகராறு.. இளம் பெண் தற்கொலை.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, சித்தையன் கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி 40. இவரது மகள் ரம்யா 20. இவருக்கும் திருச்சி பீமா நகர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரம்யா தன் கணவன் ராஜபாண்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜபாண்டி வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் ராஜபாண்டி பலமுறை தன் மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் ராஜபாண்டி மீண்டும் வீடு சென்று பார்த்தபோது ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ரம்யாவின் தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்த பிரியாணி மாஸ்டர் பலி .
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சீதக்காதி நாடு தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் 27. இவர் திருச்சி தென்னூர், குவைது இ மில்லத் நகரில் தங்கி பாலக்கரையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி அப்துல் ஜாபர் தென்னூரில் உள்ள தன் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ஜாபர் ஜனவரி 8-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.