Skip to content

திடீர் பிரியாணி கடைகள் ஏன்?.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,
மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர் அன்பழகன் பேசும்பொழுது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் புயல் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என். நேரு உத்தரவின் பேரில் நம்முடைய மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் விரைந்து சென்று அங்கு பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். திருச்சி மாநகராட்சி சார்பில் ஊழியர்களின் ஒரு மாதம் ஊதியம் ரூ2 கோடி 48 லட்சம் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம். அதேபோல திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களின் ஒரு மாத ஊதியம் ரூபாய் 6 லட்சத்து 75 ஆயிரத்தை மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதலோடு வழங்க இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பொதுமக்களுக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை திருச்சி மாநகராட்சி சார்பில் வழங்கி உள்ளோம். வெள்ள பாதித்த பொது மக்களுக்கு உரிய உதவிகளை செய்த மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் கே என் நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதன் விபரம்..

செந்தில்நாதன் (அமமுக):–

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதியை சுற்றி காய்கறிகள் கடைகள் போடப்பட்டு உள்ளது .இதனை யார் டெண்டர் எடுத்து உள்ளார்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே அங்குள்ள காய்கறி கடைகளை மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முடுக்குப் பட்டியில் இருந்து குட்செட் பாலம் வரை சாலையில் கடைகள் இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டுகிறது.நேற்று கூட ஒரு பெண் அடிபட்டு இறந்துவிட்டார்.

முத்து செல்வம் (திமுக): -பொதுவாக தரைக்கடைகள் வியாபாரம் செய்பவர்களை மாநகராட்சி சார்பில் பட்டியலிட்டு அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
மேயர்

அன்பழகன்:-விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளைஅகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருங்காலத்தில் சாலை பகுதிகளில் இருக்கும் வாய்க்காலுக்கு மேல் சிமெண்ட் போடப்பட்டு அங்கு தரைக்கடைகளை வியாபாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அம்பிகாபதி (அதிமுக)

திருச்சி வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளை விற்கவோ, வாங்கவோ பத்திரப்பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது மாநகராட்சிக்கு எல்லா வித வரியும் பொதுமக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கு மாநகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது வார்டில் வயர்லெஸ் ரோட்டில் மின்விளக்கு அமைத்துக் கொடுத்த மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மேயர்

அன்பழகன்:- இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன் (விசிக):–

எனது வார்டில் இருக்கும் இ.பி. ரோடு முக்கியமானது. பெரிய வர்த்தகம் நிறைந்த சாலை. இங்கு சாலையின் இரு பக்கங்களிலும் கனரக வாகனங்கள நிறுத்தி வைக்கப்படுகிறது. மூன்று மாதத்திற்கு முன்பு ஒருவர் விபத்தில் இறந்தார். இன்று காலை அங்குள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
குழந்தை விழுந்து படுகாயம் அடைந்தது. இதை தட்டி கேட்டபோது லாரி உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. லாரிகளை அகற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்

கோவிந்தராஜ்(காங்கிரஸ்)

41வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் டெண்டர் விடப்பட்டாலும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் தூய்மை பணியாளர்களால் சாக்கடையை தூர்வார இயலவில்லை. ஆகவே  தற்காலிக தூய்மை பணியாளர்களை எங்கள் வார்டுக்கு அனுப்பி தூய்மை பணியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் அன்பழகன்;-

855 கிலோ மீட்டரில் 800 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளது. அதில் 450 கிலோமீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளது. 317 கிலோ மீட்டருக்கு
சாலை போடுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் அதற்கான நிதி அமைச்சர் பெற்று தருவார்கள். மாநகராட்சி வார்டு வாரியாக மாமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் கட்ட இந்த மாதம் டெண்டர் விடப்படும். அதனுடன் தூய்மை பணியாளர்கள் தளவாட பொருட்கள் வைப்பதற்கும் அரை தனியாக கட்டப்படும். இந்த அலுவலகங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அலுவலகங்களை கட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பயஸ் (மனித நேய மக்கள் கட்சி)
ரூ. 20 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கிய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (திமுக)
மூன்று பேரை நாய் கடித்துள்ளது. நாய் பிரச்சினைக்கு மாற்று வழியை காண வேண்டும்.

மேயர் அன்பழகன்
8,693 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தெருக்களில் சுத்தி வரும் வெறிநாய்கள் மற்றும் கடிக்கும் நாய்களை பாலக்கரை பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கட்டப்பட்ட பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாய்கள் இறக்கும் பட்சத்தில் அதனை எந்திரம் மூலம் எரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். திருச்சி மாநகராட்சி மட்டும்தான் காலையிலும் மாலையிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது கோவை மாநகராட்சியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் படுகிறது.

ஜவகர்(காங்கிரஸ்)

கொள்ளிடம் ஆற்றில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் தண்ணீர் கலங்கலாக வருகிறது. ஆகவே குடிநீருக்கு முக்கொம்புலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் அன்பழகன்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முத்துச்செல்வம் திமுக

வாரச்சந்தைகளால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.
ஆனால் சாலையோர தள்ளுவண்டி கடைகளால் எந்த வருமானமும் இல்லை.

கவுன்சிலர் கலைச்செல்வி

எனது வார்டில் வில்லியம்ஸ் சாலையில் ஏராளமான சாலையோர பிரியாணி கடைகள் இருக்கிறது இதனால் மாநகராட்சிக்கு எந்த வருவாயும் வரவில்லை.
மேயர் அன்பழகன்
ஆணையர் வந்த பின்னர் தெருவோர கடைகள் முறைப்படுத்தப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *