திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பே சியதாவது:
கடந்த காலங்களில் மழையின் போது, மாநகராட்சியில் 62, 55, 52 ,8,26, 24 ஆகிய வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது சமீபத்தில் பெய்த மழையில் 60, 58 ,42 ஆகிய வார்டுகளில் தண்ணீர் தேங்கியது பின்னர் மோட்டார் மூலம் அந்த தண்ணீர் திருப்பி விடப்பட்டது. மாநகராட்சியில் 421 கிலோமீட்டர் தூரத்துக்கு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரிய காரணத்தினால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு இந்த பாதிப்புகளும் இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் .காலி மனைகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க முட்புதர்கள் அகற்றப்பட்டு பள்ளங்களை நிரப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு திருச்சி மாநகராட்சி பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் அப்போது மழையால் ஏற்படும் பாதிப்புகள் இருக்காது.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதங்கள் வருமாறு:
லீலா வேலு (திமுக);-
எனது வார்டுக்கு உட்பட்ட அன்னை நகர் பகுதியில் மழை நீரால் 50 க்கு மேற்பட்ட வீடுகள் சூழ்ந்தது அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்
மேயர் அன்பழகன்: கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி
ஒவ்வொரு வார்டுக்கும் வருகிற ஜனவரி மாதம் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிக்கால் பணிகளுக்கு டெண்டர் விடப்படும்.
சுரேஷ் (இ.கம்யூ) :
தகைசால் தமிழர் தோழர் நல்ல கண்ணு நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு இந்த மாமன்ற கூட்டத்தில் குறத்தெரு என்கிற ஜாதி பெயரில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தை ஆர்.நல்ல கண்ணு பஸ் நிறுத்தம் என்று பெயர் மாற்றம் செய்ய இந்த மாமன்றத்தில் தீர்மானத்தை சமர்ப்பிக்கிறேன். இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :-
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பான கேட் அமைக்கப்பட்டது போன்று அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் சிலை இரும்பு கேட் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
எல்.ஐ.சி. சங்கர் (திமுக):இன்றைய மாமன்ற கூட்டத்தில் கூடுதலாக விதிக்கப்பட்டு வரும் வணிகவரி சரியான முறையில் நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் 24ந்தேதி முதல் அமல் செய்தால் மட்டுமே பொது மக்களுக்கு பாதிப்பு குறையும். அதை விட்டு விட்டு 2022ம் ஆண்டு முதல் அமுல்படுத்தும் போது பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். வாடகைதாரரிடம் கடந்த கால வரி உயர்வை காட்டி கூடுதல் வாடகை கேட்க முடியாது. அதே முறையில் கணக்கிடும் போது முழு அளவும் வீட்டு வரி இருக்கும்போது கமர்சியல் வரி புதிதாக போடும்போது வீட்டு வரியை குறைக்க வேண்டிய அவசியமாகிறது. அதை செய்யாமல் கமர்சியல் வரி மட்டும் போட்டால் பொதுமக்கள் நீதிமன்றத்தை அணுகினால் வரி உயர்வை நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்புண்டு
மரக்கடை டேங்க் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது இந்த நேரத்தில் மரக்கடை டேங்க் கிளீன் செய்ய தேவையான படிக்கட்டுகள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி : தென்னூரில் இருந்து அறிவியல் பூங்கா செல்லும் பாதையில் உள்ள பெரிய மழை நீர் வடிகாலை தூர் வார வேண்டும்.
மண்டிசேகர் (திமுக): எனது வார்டுக்கு உட்பட்ட மணல் வாரி துறை பகுதியில் உள்ள சுடுகாட்டு எரிவாயு தகனத்தில் ஈம சடங்கு செய்யும் பொதுமக்கள் அமர்ந்து காரியங்களை செய்ய ஒரு மண்டபம் கட்டித் தர வேண்டும்.
மேயர் அன்பழகன் : சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் போது கவுன்சிலர்கள், உரிமையாளர்களுக்கு ஆதரவாகபேசி மாடுகளை விடுவிக்க கூடாது.
மதிவாணன் (கோட்டத் தலைவர்): மாநகராட்சியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் பொதுமக்களின்வாழ்வாதாரமாக மாடுகள் இருந்து வருகிறது.அந்த மாடுகள் மெயின் ரோட்டிற்கு வரும் பொழுது பிடிக்கலாம். ஆனால் கிராமத்திற்கு சென்று மாடுகளை பிடிப்பது சரியான முறை அல்ல.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
மேயர் அன்பழகன்: தெருக்களில் சுற்றி திரியும் போது தான் மாடுகளை பிடிப்பார்கள்.
முத்து செல்வம் (திமுக):- மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை மாநகராட்சி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
காஜாமலை விஜய் (திமுக) :- இங்கே இருக்கும் நிறைய கவுன்சிலர்கள் ஆன்மீகவாதிகள்.அதனால் கோமாதாவை மதிக்கும் வகையில் அபராத தொகையை குறையுங்கள்
ராமதாஸ் (திமுக):- எல்லா கவுன்சிலர்களும் ஆன்மீகவாதி கிடையாது. பெரியார்வாதியும் உள்ளார்கள்.
நாகராஜ் (திமுக):- எனது வார்டில் மாடுகளை பிடித்து சென்ற பிறகு அந்த மாடுகள் எங்கு உள்ளது என்பதே தெரியாமல் அலைக்கழிக்க விடுகின்றனர் மாடுகளை பிடிப்பதுயார் எங்கு கொண்டு செல்வார்கள் என்ற விவரங்களை மாநகராட்சி தெளிவாக கூற வேண்டும்.
காஜாமலை விஜய் (திமுக):-எனது வார்டில் நீண்ட நாள் பிரச்சனையான பாதாள சாக்கடை திட்ட பணியை நிறைவேற்றி தர வேண்டும்.
மேயர் அன்பழகன் : – தற்பொழுது உள்ள பாதாள சாக்கடை மூன்றாவது திட்டத்தில் உங்கள் வார்டு பகுதியை சேர்த்துள்ளோம் என்றார்.தொடர்ந்து கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.