Skip to content

திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர பகுதியில் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, அவற்றின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தியது மற்றும் அவற்றுக்கு கருத்தடை செய்தது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மாநகர மேயர் வெளியிட, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது… பொன்மலை ஜீ}கார்னர் முதல் செந்நதண்ணீர்புரம் வரை சாலை விளக்குகள் அமைத்துத்தர வேண்டும். கோடை காலம் நெருங்குவதால் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 42 ஆவது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்எஸ்பி சாலையில் அமைந்துள்ள தெப்பகுளத்துக்கு மழைநீர் வடிகாலுடன் சேர்ந்து, கழிவுநீரும் தெப்பக்குளத்துக்குள் செல்வதை தடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலைய சுற்றுப்புற பகுதிகளில், மீண்டும், மீண்டும் பிரியாணிக்கடைகள் முளைத்தபடி உள்ளன. சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இந்த பிரியாணி கடைகளை தடை செய்ய வேண்டும். மாநகராட்சி 48 -வது வார்டு பகுதியில் இதுவரை ஒரு வளர்ச்சித்திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை.
புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் திருவிழா அடுத்த சில தினங்களில் துவங்கவுள்ளதால், உடனடியாக இப்பகுதி சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இறந்த துôய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வாரிசுதாரர் அடிப்படையில், அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப மாநகராட்சியில் பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவிகித வரி உயர்வு என்பது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் இடையிலான பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண வேண்டும் தேவை என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இவற்றுக்கு பதிலளித்த மேயர், அன்பழகன் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.₹2, 280 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து குறிப்புகள் பெறப்பட்டது. இவை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். கடந்த 2022 முதல் கடந்த மாதம் வரை சாலைகளில் சுற்றித்திரிந்த 667 கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வகையில் ₹19 லட்சத்து 77 ஆயிரத்து 500ம், 51 கால்நடைகளை ஏலம் விட்ட வகையில் ரூ2 லட்சத்து 71 ஆயிரமும் என மொத்தம் ₹22 லட்சத்து 48 ஆயிரத்து 500 மாநகராட்சிக்கு உபரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனவே மாநகரப்பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை அவிழ்த்துவிடக்கூடாது .
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் ,நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!