திருச்சி மாநகராட்சியின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
திருச்சி மாநகராட்சியில் தற்போது தினமும் 135 எம்எல்டி அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவினை தங்கு டையின்றி வழங்க காவிரி ஆற்றில் புதிதாக மேலும் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் ஆதாரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாநகராட்சி வீட்டு பயன்பாடு இல்லாத குடிநீர் இணைப்புகளில் சுமார் 3 ஆயிரம் மீட்டர்கள் பொருத்தப்பட்டு குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் உபயோக அளவிற்கு ஏற்றவாறு கட்டணம் வசூல் செய்வதற்கு ஏதுவாக புதிதாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தெரு நாய்களின் பெருக்கத்தால் பொதுமக்கள் அதி்கம் பாதிக்கப்பட்டனர். எனவே திருச்சியில் 9559 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக இதுவரை 135 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
திருச்சி மாநகராட்சியின் நுழைவு வாயிலாக இருக்கும் அனைத்து உல்லைகளிலும் புராதன அலங்கார விளக்குள் அமைக்கப்பட்டு ஒளிமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருச்சி மாநகராட்சியில் செந்தண்ணீர்புரம், ஸ்டேட்பாங்க் காலனி, பாரி நகர், பசுமை நகர், மதுரை ரோடு, இருதயபுரம், பழனியப்பா நகர், பொன்மலை அடிவாரம், ராஜராஜநகர், கிராப்பட்டி ஆகிய 10 இடங்களில் ரூ.17 கோடியே 68 லட்சத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.