திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை காலை 10:30 மணிக்கு (20 ஆம் தேதி) திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தில்லை நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசுகையில்:-
திருச்சி மாநகராட்சி 17,19,20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து வருகிற 20 ஆம் தேதி திருச்சி, மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி, போக்குவரத்து மாற்றம், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், விடியா திமுக அரசுக்கு எதிராக, பொதுமக்களுக்கு ஆதரவான அதிமுகவின் கண்டன குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் குமார், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.