திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில் பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சியான போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி ஜிஎச்-ல் குழந்தை வார்டில் அனுமதித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அருகில் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி ( 19) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை என்பது தெரியவந்தது.
மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்ததாகவும் , வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்தது . இந்நிலையில் ஆபத்தான நிலையில் கல்லூரிமாணவி கலைவாணி திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தன்னை விஷம் ஊற்றி கொன்றதாக அவர் வாக்குகூலத்தில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை விஏஓ சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணையை துவங்கினர்.
கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மர்ம சாவு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் தந்தை-அத்தை என 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணமாகாமல் குழந்தை பெற்றதற்காக கல்லூரி மாணவி கலைவாணியை விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.