திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (42), இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு கார்த்தி (13) என்ற, 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். பாலக்கரை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் வள்ளி கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையே வள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி, சென்னை, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், வள்ளி வாங்கிய கடன், 90 ஆயிரம் ரூபாயை உடனடியாக கட்ட வலியுறுத்தி, மோகனிடம் குழுத் தலைவி உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வாடகை வீட்டில் இருக்கும் மோகன் மற்றும் அவரது மகனை, பணம் தராவிட்டால் வீட்டை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தனர்.
மனைவியின் சிகிச்சைக்காக ஏற்கனவே கடன் வாங்கி மோகன் செலவு செய்த நிலையில், தற்போது தினந்தோறும் வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்.
மேலும், மகனை நன்றாக படிக்க வைக்க விரும்பும் மோகன், கடன் நெருக்கடிகள் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம், கண்ணீர் மல்க மோகன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், ‘தனது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதற்கு உதவி செய்ய வேண்டும். எனது மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
கோரிக்கையை ஏற்று கூலித்தொழிலாளியின் கடனை தள்ளுபடி செய்ய கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார். இதற்கு கூலி தொழிலாளி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தனது மகனின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.