புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா (27) இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்
இதை நம்பிய பாண்டிபிரியா ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவர் தான் அணிந்திருந்த எட்டரை பவுன் நகைகள் மற்றும் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தின் சாவி மற்றும் செல்போன் ஆகியவற்றை முகமது மீரானிடம் கொடுத்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளே சென்றார். பின்னர் ஸ்கேன் எடுத்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது முகமது மீரான் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட பாண்டி பிரியா ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.