திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பெருந்திரளானோர் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
குறிப்பாக இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பச்சை துண்டு அணிந்து கூட்டத்தில் பங்கேற்றது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
கூட்டுறவு சங்கத்தில் நிலவும் உரம் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேநேரம் தற்போது பருவமழை பெய்யாமலும் காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததாலும் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த காலங்களில் குருவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை அரசு அறிவித்தது போல சம்பா சாகுபடி மேற்கொள்ளவும் சிறப்பு தொகுப்பு திட்டத்தினை வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் வாயிலாக கேட்டுக் கொண்டனர்.