திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ்( 37) . இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த பாக்கியராஜ். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜென்னி பிளாசாவில் உள்ள வின்ஸ் டு ஈரோப் என்ற வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தை பாக்கியராஜ் தொடர்புகொண்டு துபாயில் உணவு ஆர்டர்களை எடுத்து டெலிவரி செய்யும் பணியில் கடந்த2 மாதமாக ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் சேர்த்து புள்ளம்பாடி, திருச்சி மாநகர் அரியலூர் என 13 பேர் வெளிநாட்டிற்கு தல 1 லட்ச ரூபாய் வீதம் கட்டி சென்றுள்ளனர்.
துபாயில் உள்ள நிறுவனம் கடந்த 10 நாட்களாக இவர்களுக்கு உணவு கொடுக்காமலும் தங்குவதற்கு இடம் தராமலும் இரண்டு மாதமாக பணி செய்தும் அவர்களுக்கு ஊதியம் வழங்காமலும் கொடுமை செய்துள்ளனர். மேலும் பாக்கியராஜ் டூவீலரில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டு கால்களில் காயம் அடைந்துள்ளார். இதற்கு எவ்வித உதவியும் அந்நிறுவனம் செய்யாமல் உணவு கொடுக்காமல் பணிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் துபாய் சென்றவர்கள் தாங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என தாங்கள் பணி புரியும் நிறுவனத்திடம் கூறியுள்ளனர் .
அதற்கு அவர்கள் பாஸ்போர்ட் தராமல் நீங்கள் இங்கே தான் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து திருச்சியில் உள்ள வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு அப்படித்தான் இருக்கும் நீங்கள் அங்கே தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு போனை சுவிட்ச் ஆப்
செய்து உள்ளனர். இதனால் அவர்கள் தாங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று துபாயிலிருந்து வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சண்முகப்பிரியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமாரிடம் தங்களது உறவினர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து பாக்யராஜின் மனைவி சண்முகப்பிரியா கூறும் போது…..
என்னுடைய கணவர் மட்டுமல்லாமல் 13 பேர் உணவுடெலிவரி செய்யும் பணிக்கு சென்றவர்கள் தற்போது உணவு இல்லாமல் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர் இவர்களை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் மேலும் என் கணவருக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுதும் உணவு கொடுக்காமல் கண்டெய்னரில் தங்க வைத்து உள்ளனர் இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இதுபோன்ற வெளிநாட்டுக்கு பொய்யாக கூறி அழைத்துச் சென்று துன்புறுத்தும் ஏஜென்சிகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.