திருச்சி என்ஐடியில் மாணவ, மாணவிகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். என்ஐடி பிரச்னை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:
என் ஐ டி கல்லூரியில் மாணவி மீதான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து ஏற்கனவே கைதுசெய்துவிட்டோம், வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளநிலையில், நிர்வாகத்திடம் இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுப்பார்கள்.
பாலியல் தொடர்பான புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் ஆய்வு செய்துள்ளனர், சிசிடிவி செயல்படவில்லை என்றால் அதனை மேம்படுத்துவதற்கு நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.
பெண்கள் விடுதியில் நுழைய ஆண்களை அனுமதிப்பதில்லை, இதுபோன்று பிளம்பிங், எலக்ட்ரிஷியன் போன்ற பணிகளுக்கு செல்லும்போது வார்டன் துணையுடன் தான் ஆண்கள் செல்ல வேண்டும், மாறாக தனியே ஆண்கள் செல்லக்கூடாது .இதில் பாதுகாப்புகுறைபாடு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அதனை சரிசெய்ய என்ஐடி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.