திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாராந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதைத் தவிர கோட்டத்தில் உள்ள 25 குட்ஷெட்டுகள், 12 நிறுவனங்களுக்குள் சரக்கேற்றும் முனையங்கள் ஆகியவற்றின் மூலம் மாதம் 10 லட்சம் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு மொத்த ரயில்வேயின் வருமானத்தையும் கணிசமான அளவில் உயா்த்தி வருகிறது.
இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் அதிகபட்ச அளவிலான சரக்குகளைக் கையாண்டு வருமானம் ஈட்டியுள்ளது. ஏப்ரல் முதல் டிச. 28 வரையிலான 9 மாதங்களில் 103.04 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு ரூ. 588.21 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
2020-21-ம் நிதியாண்டில் 84.30 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ. 453.57 கோடி வருமானமும், 2021-22 ம் நிதியாண்டில் 87.78 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.451.87 கோடி வருமானமும், 2022-23 ம் நிதியாண்டில் 135.52 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ. 810.83 கோடி வருமானமும் ஈட்டியது.
இதில் கடந்த 9 மாதங்களில் 79.80 லட்சம் டன் நிலக்கரி சரக்கை கையாண்டதில் ரூ. 451.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஐடிபிசிஎல் என்ற அரசு ஒப்பந்த நிறுவனம் காரைக்கால் துறைமுகத்திலிருந்து அதிகளவில் நிலக்கரியை ஏற்றி புதுச்சத்திரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளைக்கு அனுப்பியுள்ளதன் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது.