திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள டிஇஎல்சி துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் கிரேசி சகாய ராணி. இவரது மகன் சாம்சன் (31). டாக்டர். இவர் திருச்சி மாவட்டம் அன்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் விடுதிக்கு வந்து மருத்துவம் செய்ய வருவதாக கூறி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் உதவி மையம் 1098ல் பெறப்பட்ட தகவலின் பேரில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமையாசிரியர் சகாய ராணி, மகன் மருத்துவர் சாம்சன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அரசு டாக்டர் சாம்சன் மீது 9 ,10 ,11 ,12 போக்சோ சட்டப்பிரிவு, ஐபிசி 452, 323 ஆகிய பிரிவுகளிலும், தலைமை ஆசிரியர் சகாய ராணி மீது குற்றத்தை மறைத்தல் 21 சட்டப்பிரிவிலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நேற்று மாலை இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை அழைத்து வந்தனர். பரிசோதனை மேற்கொள்ள நேரமானதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட முடியாமல் போக இருவரையும் மகிளா நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் நீதிபதி விடுமுறையில் இருப்பதால் வேறு நீதிபதியின் வீட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்ததால் இருவரையும் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் அமர வைத்திருந்தனர். ஏற்கனவே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது தலைமை ஆசிரியை சகாய ராணி மற்றும் டாக்டர் சாம்சன் ஆகியோரின் முகங்களை போலீசார் துணியில் மூடி அழைத்து வந்தனர். அப்போது அவர்களை போட்டோ எடுக்க முடியவில்லை. இதனால் கோர்ட் வளாகத்தில் நின்ற வாகனத்தில் இருவரும் இருந்த போது பத்திரிக்கையாளர்கள் இருவரையும் போட்டோ எடுக்க முயன்றனர். ஆனால் போலீஸ் உதவி கமிஷனர் ஏன் போட்டோ எடுக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து திடீரென சகாய ராணி மற்றும் சாம்சன் இருவரையும் வைத்திருந்த போலீஸ் வாகனத்தை போலீசார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினர். உடனே பத்திரிக்கையாளர்களும் வாகனத்தை பின்தொடர போலீஸ் வாகனம் தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பொன்மலை ரயில்வே பாலம், பழைய பால் பண்ணை,காவிரி பாலம், திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, மீண்டும் காவிரி ஆறு பாலம், சத்திரம் பேருந்து நிலையம், வழியாக சென்றனர். அந்த சமயத்தில் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருந்த இருவரும் தலையில் துணியை மூடிக்கொண்டனர். தலைமையாசிரியர் சகாய ராணி பெண் காவலரின் மடியிலேயே படுத்துக்கொண்டார். பத்திரிக்கையாளர்கள் பத்துக்கு மேற்பட்ட டூவீலர்களில் போலீஸ் வாகனத்தை தொடர்ந்து பின்தொடர வேறு வழியில்லாமல் காந்தி மார்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வாகனத்தை நிறுத்தி இருவரையும் அங்கு அமர வைத்தனர். இறுதியில் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் காலையில் 2 பேரையும் ரிமாண்ட் செய்ய கோர்ட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் செல்ல 3 கிமீ தான். ஆனால் போலீசார் பத்திரிக்கையாளர்களுக்கு போக்கு காட்டி சுமார் 19 கிலோமீட்டர் சுற்றியது ஏன்? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போக்சோ குற்றவாளியை போட்டோ எடுக்காமல் பாதுகாக்க ஏன் போலீசார் இப்படி போராட வேண்டும்? என்கிற கேள்வியும் இந்த விவகாரத்தில் தலையிட்ட விஐபி யார்? என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.