திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு ராஜா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்குள்ள திருச்சி சிவா எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3 பேர் அமைச்சரின் காரை மறித்து கருப்புகொடி காட்டினர். இதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவில் உள்ள நபர்களே நடந்துக்கொண்ட விதத்தால் பரபரப்பான இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த நேருவின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென சிவா எம்.பி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார், பைக், நாற்காலிகளை அடித்து உடைத்தனர். அமைச்சருக்கு கருப்புகொடி காட்டிய நபர்கள் சிலரை கோர்ட் போலீசார் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற திமுகவினர் சிலர் ஸ்டேஷனுக்குள் புகுந்து அவர்களை தாக்கியதாக தகவல் வெளியானது.. அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேஷனுக்குள் திமுகவினர் உள்ளே செல்வது மற்றும் சிலர் தாக்குவது போன்ற வீடியோக்கள் வெளியாகின… இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் அங்குள்ள கம்பியூட்டரில் பதிவாகும். ஸ்டேஷனில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் அடுத்த சில நிமிடங்களில் வெளியானதோடு மீடியா ஆட்களுக்கு பகிரடப்பட்டது.. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்க கூடிய வீடியோ பதிவுகள் அடுத்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான நபர்களின் வாட்ஸ் அப்களில் உலா வந்தது எப்படி? அதனை வெளியிட்ட கறுப்பு ஆடு யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது…