மோட்டார் சைக்கிளில் சென்றவர்
தவறி விழுந்து பரிதாப சாவு
திருச்சிமாவட்டம் லால்குடி அருகே உள்ள மருதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் மூவேந்தர் ( 30). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதைத் தொடர்ந்து மூவேந்தர் தனது மனைவியை பிரசவத்துக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு வீடு திரும்பினார் .சமயபுரம் மருதூர் சாலையில் ராஜா கள்ளிக்குடி என்ற பகுதியில் சாலையின் வளைவு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து மூவேந்தர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மூவேந்தர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவேந்தர் இறந்த சம்பவத்தை அவருக்கு தெரியப்படுத்த முடியாமல் உறவினர்கள் தவிர்த்து வருகின்றனர்.
தனியார் நிறுவன
ஊழியர் திடீர் மாயம்
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (62). இவரது மகன் கார்த்திக்குமார்(31), உறையூர் பாளையம் பஜார் பகுதியில் ஒரு நெட்வொர்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன் அலுவலக வாசலில் டூவீலரை நிறுத்திவிட்டு சென்றவர், அதன் பிறகு காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில், உறையூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான கார்த்திக்குமாரை தேடி வருகின்றனர்.
மளிகை கடையில் பூட்டை உடைத்து
பணம் பொருட்கள் கொள்ளை
திருச்சி பாலக்கரை கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (68). இவர் பாலக்கரை துரைசாமிபுரம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றவர், மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் இருந்த ₹2 ஆயிரம் ரொக்கம், ₹10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் மற்றும் பீடிக்கட்டுகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கத்தி முனையில் பணம்
பறித்த 2ரவுடிகள் கைது
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (41). இவர் நேற்று சாலை ரோடு கார்பேஜ் குடோன் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அரியமங்கலம் தென்றல் நகர் காந்திநகரை சேர்ந்த கேசவமூர்த்தி (26) மற்றும் அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் தெருவை சேர்ந்த முகமது தவுபிக் (25) ஆகிய சரித்திர பதிவேடு ரவுடிகள் வழிமறித்து, கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ரவுடிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
செல்போன்கடையில்
திருடிய 2 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் நூர் அமீன் (45). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த 2 செல்போன்கள் மற்றும் கைக் கடிகாரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து நூர் அமீன் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பிதிந்து இ.பி.ரோடு
கமலா நேரு நகரைச் சேர்ந்த குணசேகரன் (30) மற்றும் பாலாஜி (24) ஆகிய இருவரை செல்போன் திருடியதாக கைது செய்தனர்.
கஞ்சா விற்றதாக
2 வாலிபர்கள் கைது.
திருச்சி, எ.புதுார், தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, மலைப்பட்டியைச் சேர்ந்த சபரி (34) என்பவரை கஞ்சா விற்றதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிலோ 270 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலையில் வாலிபர்களுக்கு கஞ்சா விற்ற ராம்ஜிநகர், மில் காலனியைச் சேர்ந்த பிரபு (42) என்பவரை எ.புதுார் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 225 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது