மின்சாரம் பாய்ந்து
இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, திருவெறும்பூர், கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் தினேஷ் (28). இவர் கழிவு நீர் அகற்றும் டேங்கர் (லாரி) ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தினேஷ் நேற்றிரவு திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் பகுதியில் சாலை மையத் தடுப்பை தாண்டிச்செல்ல முயன்றார். அப்போது மையத் தடுப்பில் உள்ள மின் கம்பத்தில் கை வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் தினேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினேஷ்க்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
காதல் விவகாரம் தற்கொலைக்கு முயன்றார் இளைஞர்
திருச்சி, காட்டூர் விண் நகர் 4 ஆவது தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (50) }லட்சுமி (44) தம்பதியரின் மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய பெண்கேட்ட நிலையில், பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தரேஷ் குமார் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமாரும் லட்சுமியும், தங்களது மகனின் நிலை இவ்வாறு இருக்க தாங்கள் உயிர்வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் எனக் கூறி அவர்களும் விஷம் உட்கொண்டுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் மூவரையும் திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் மூழ்கிய இளைஞர்
திருச்சி, வடக்கு கட்டுரை சேர்ந்தவர் கனகராஜ். திக நிர்வாகியான, இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். மூன்று மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அதில் ராஜராஜன் என்ற மகன் அண்மையில் தாயகம் திரும்பியிருந்தாராம். அவர் வீட்டருகேயுள்ள தனது நண்பருடன் காவிரி ஆற்றில், வேங்கூர் பூசத்துறை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆழமான பகுதிக்குச் சென்ற ராஜராஜன் மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் அவரது குடும்பத்தாரும், திருவெறும்பூர் தீயணைப்பு துறையினரும் நிகழ்விடம் வந்து இளைஞரை தேடியும் அவரை காணமுடியவில்லை. எனவே இளைஞர் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருட்டிவிட்டதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மறுநாள் பகலில் தேடும் பணியை தொடரலாம் எனக்கூறி தீயணைப்பு வீரர்கள் திரும்பிச்சென்றனர்.
இதற்கிடையில் ராஜராஜன் தண்ணீரில் மூழ்கிய இடம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட் ட பகுதியா அல்லது தஞ்சை மாவட்டம் தோகூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்டதா என போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் நள்ளிரவில் விபத்து:
திருச்சியில் நேற்றிரவு மத்திய பஸ் ஸ்டாண்ட் ஜங்சன் வழியாக தலைமை அஞ்சலகம் நோக்கி கார் ஒன்று ஒன்று புறப்பட்டது. அந்த காரில் 4 இளைஞர்கள் இருந்தனர். கார் கண்டோன்மென்ட் பாரதியார் சாலையில் ஜங்ஷன் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக் குள்ளாகியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி காரில் இருந்த இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அனைவரும் காரிலேயே மயங்கி சரிந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.