பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (26). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு வருகிறார். மேலும் தென்னூர் ஜெனரல் பஜார் அருகே டூவீலர் ரிப்பேர் செய்யும் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தென்னூர் அரசமரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்ததென்னூர் ஆழ்வார்தோப்பு சின்னசாமி நகர் பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா என்கிற உப்பு மாலிக் (24) என்பவர் இவரிடம் வந்து தகராறு செய்து குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை எடுத்து குத்தி விடுவதாக மிரட்டி இவரை கீழே தள்ளி விட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாண்டியராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் பாலீசார் வழக்கு பதிவு செய்து மாலிக் பாஷா என்கிற உப்பு மாலிக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
திருச்சி காஜாமலை தாமரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (42). ஆட்டோ டிரைவர் இவரது நண்பர் செந்தில். இவர் கோபியிடம் அவரது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார் .அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த செந்தில் கோபியை அரிவாளால் வெட்டினார். இதில் கோபியின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து கே.கே.நகர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்னி பஸ் புரோக்கர் மீது திடீர் தாக்குதல்
திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (40).ஆம்னி பஸ் டிக்கெட் புரோக்கர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள தேவர் சிலை அருகாமையில் தூங்கிய ஒரு வாலிபரை தட்டி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் வேல்முருகனை கையால் அடித்து கீழே தள்ளினார். இதில் கீழே விழுந்ததில் வேல்முருகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது .இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை பிடித்து விசாரித்தனர். இதில் வேல்முருகனை தாக்கிய அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து உடனடியாக போலீசார் விடுவித்தனர்.
பல்வேறு பொருட்களை திருடிய 7 பேர் கைது
திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் ( 73 ) இவர் அந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பி மற்றும் பல்வேறு பொருட்களை வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த இரும்பு பைப், 20 இரும்பு ராடுகள் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி பீமநகர் கோட்ட கொல்லை தெருவை சேர்ந்த பிரபு (26), திருச்சி மேட்டு தெரு மார்சிங்பேட்டை ஜெயராஜ் (21), திருச்சி கூனி பஜார் சவேரியார் கோவில் தெரு ஜாக்கப் ஸ்டீபன் (வயது 24), மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் தெரு அருண்குமார் (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இதேபோல் திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த கணேசன் என்பவரிடம் டவுண் பஸ்ஸில் செல்லும் போது செல்போனை திருடியதாக கொட்டப்பட்டுவை சேர்ந்த நவதீபன், வீர மணிகண்டன், சந்தோஷ் பிரியன் ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.