இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டன. பல இடங்களில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
2 மாதத்திற்கு மேலாக அங்கு கலவரம் நடந்தபோதும், அது குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட கூற வில்லை. அதே நேரத்தில் உலகத்தில் உள்ள மற்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார். அமெரிக்கா, பிரான்ஸ், அமீரகம் என வெளிநாடு சுற்றுப்பணம் மேற்கொள்கிறார்.
ஆனால் உள் நாட்டில் ஒரு மாநிலம் பற்றி எரிவது பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மணிப்பூரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும் திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சகாய ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர், பங்கு பேரவையினர் என 400க்கும் மேற்பட்டோர் பொன்மலை ஆரோக்கிய மாதா கெபியில் இருந்து புனித சூசையப்பர் ஆலயம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று, அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.