ஆசியாவிலேயே சிறப்பு மிக்க வண்ணத்து பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.. இதனை தொடா்ந்து திருச்சி காவிரிக் கரையில் பறவைகள் பூங்காவை உருவாக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது.
ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் நடுக்கரை கிராமத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பிரசித்தி பெற்றது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே 27 ஏக்கா் நில பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. அழிந்து வரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும் இந்த வண்ணத்து பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டது.
இதே போல, பறவைகள் பூங்காவையும் காவிரிக் கரையில் உருவாக்க திருச்சி மாவட்ட நிா்வாகம் பூா்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் வட்டம் காவேரி கரையோரம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. ஏற்கெனவே, மே 5 ஆம் தேதி இந்த பகுதியை அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் மா.பிரதீப்குமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா். இந்த நிலையில், இரண்டாவது முறையாகவும் அய்யாளம்மன் படித்துறை, காவிரிக் கரைப் பகுதிகளில் அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆகியோா் (நேற்று) மீண்டும் ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரநிதிகள் உடன் இருந்தனா்.
காவிரியாற்றின் கரையோரத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கு, பாதுகாக்கப்பட்ட காப்பகமாக, மெகா பறவைகள் பூங்கா அமைக்க சுமாா் 2 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பூா்வாங்க முன்மொழிவின்படி, பறவைக் கூடம் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் கண்டு களிக்க பொழுது போக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பறவையினங்கள் மற்றும் சீசன் தோறும் இடம் பெயா்ந்து வரும் வெளிநாட்டு பறவையினங்களையும் ஈா்த்திடும் வகையில் இந்த பூங்கா கட்டமைக்கப்பட உள்ளது. மரங்கள் மற்றும் சிறு நீரோடைகளுடன் தற்போதுள்ள பசுமையான சூழலுடன், பாதுகாப்பான சூழ்நிலையில் பறவைகளை வளா்ப்பதற்கு இயற்கையான சூழலை வழங்கவும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.திருச்சியில் ஓய்வு நேரத்தைக் கழிக்க பொதுமக்களுக்கு ஏற்ற போதிய இடங்கள் இல்லாததால், உள்ளூா் மக்களுக்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முறையான பொழுதுபோக்கு வசதியை உருவாக்க மாவட்ட நிா்வாகத்தால் இந்த பறவைகள் பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான நிதி ஆதாரம் இறுதி செய்யப்படும் என்றும் வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.