திருச்சி மாவட்டம் துறையூர் கனரா வங்கியில் 41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் முகேஷ் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, துறையூர் பாலக்கரை பகுதியில் கனரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியிருப்பவர் முகேஷ். இந்த வங்கியில் துறையூர் மற்றும் சுற்றுப்புற சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அத்துடன் ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடனும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இங்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முகேஷ் என்பவர் தங்க நகை மீது கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை மதிப்பீடு செய்து அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரியிடம் கொடுத்து வந்தார்.
சில வாடிக்கையாளர்களிடம் மோசடியாக 2 விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று அதில் ஒன்றில் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தின் சரியான அளவீட்டை நிரப்பியும் மற்றொரு விண்ணப்பத்தில் அதிக எடை மற்றும் ரொக்கத்தை நிரப்பி அதனை அதிகாரியிடம் கொடுத்தும் மோசடி செய்துள்ளார் மேலும் மீட்கப்பட்ட நகைக்கு பதிலாக மோசடியாக மீண்டும் அந்த நகையை அடமானம் வைத்து ரூபாய் 41 லட்சத்து 22 ஆயிரத்தை வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது தணிக்கையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மதிப்பீட்டாளர் முகேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் துறையூர் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.