நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ந் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ம் ஆண்டு ஜூலை 3 ந்தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 25 ந்தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர்
தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி முதல் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தருகின்றனர். இவர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.இந்தக் குழுவினர் இன்று திருச்சிக்கு வருகை புரிந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விசாரணை நடத்துவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.மேலும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த இன்று வருவதாக தகவல்கள் கசிந்தது. இதையடுத்து
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொலை நடந்த காலகட்டத்தில் பதிவான தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஆய்வு செய்ய சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில் இரண்டு தடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 10 பேர் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆமை வேகத்தில் நடந்த கோடநாடு வழக்கு தற்பொழுது சூடு பிடித்துள்ளது.