திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் புள்ளம்பாடியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த 29 ந்தேதி தனது குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர். நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாலகிருஷ்ணன் தனது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதில் வீட்டின் பீரோவில் இருந்து தங்கச்சங்கிலிகள், தோடு, மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகையும், ரூ.17 ஆயிரமும் திருட்டு போயிருந்தது. அவரது தம்பி வீட்டின் பீரோவில் இருந்த 2¼ பவுன் நகையும் திருட்டு போனது.
இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் லில்லி சம்பவ இடத்திற்கு வர அழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறுது தூரம் சென்று விட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.