திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து நிலையத்தை மாற்றுவதென அரசு முடிவு செய்தது.
அதன்படி திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் சுமார் 243.78 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணியும், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் அனைத்து பணிகளும் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சுமார் 40.60 ஏக்கர் மொத்த பரப்பளவில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. 124 புறநகர் பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், 142 நீண்ட தூர பேருந்துகளை நிறுத்தும் வகையிலும் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் 78 குறைந்த நேர நிறுத்த தடங்கள் என மொத்தமாக 404 பேருந்து நிறுத்த வசதி உள்ளது. இது தவிர 60 நகரப்பேருந்து நிறுத்த இடங்களும் 70 கடைகள் என மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையம் இரண்டு அடுக்குகளை கொண்டது போல் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் தளம் அமைக்கும் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வந்தது. இதுவரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரங்களுக்கு இன்று ஒரு தனியார் பஸ்சை கொண்டு வந்து அதை நிறுத்தி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். பஸ்சின் உயரம், அகலத்திற்கு ஏற்பட ஒவ்வொரு பஸ்களும் நிற்கும் இடத்திற்கு இடம் ஒதுக்குவதற்காக இந்த சோதனை செய்யப்பட்டது. அத்துடன் பஸ் நி்லையத்தின் மாதிரி படங்களும் இன்று வெளியிடப்பட்டன.