Skip to content
Home » நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழகத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த விழா நாளை கொண்டாடப்படுகிறது.   தமிழகம் முழுக்க ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், திருச்சி, தஞ்சை,  உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா மிகவும்  விசேஷமானது.

நாளை அதிகாலை முதல் மக்கள் குடும்பத்தோடு காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து  ஆற்றில் நீராடி  காவிரி அன்னைக்கு தீபாராதனை செய்து வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள்  தங்கள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள்.  

திருமணமான பெண்கள்  குழந்தை பாக்கியம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமணம் வேண்டியும் வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடிப்பெருக்கில்  செய்யப்படும் வேண்டுதல்கள் உடனடியாக பலிக்கும் என்பது ஐதீபம் என்பதால் தாலிப்பெருக்கு சடங்குகளும் நடத்துவார்கள்.

இதையொட்டி காவிரி கரைகளில் நாளை தற்காலிக கடைகள் அமைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில்  சிறுவர்கள் , குழந்தைகள் ஆற்றுக்கு சிறிய தேர் இழுத்து வருவார்கள். இதற்காக இன்று முதல் தேர் விற்பனை நடந்து வருகிறது. பெண்கள் ஆற்றில் புனித நீராடி கருகமணி அணிந்து கொள்வார்கள்.  கைகளிலும்  கழுத்திலும்  கயிறு அணிந்து கொள்வார்கள்.

இதற்காக நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு வரை காவிரி, கொள்ளிடக்கரைகள் மக்கள் வெள்ளமென திரள்வார்கள்.  ஆனால் இந்த ஆண்டு இரு ஆறுகளிலும் வெள்ளம் அபாய கட்டத்தில் செல்கிறது. எனவே  இரு ஆற்றங்கரைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், சில இடங்களில் குளிக்க செல்லக்கூடாது என தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நி்லையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்,  காவிரி, கொள்ளிடம் நதிகளை ஆய்வு செய்தார். ஆடிப்பெருக்கு தினத்தில் மக்கள் வழக்கமாக அதிகமாக கூடும்  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பூஜை செய்யும், நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பாதுகாக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பக்தர்கள் நீராட வேண்டும். போலீசார் அனுமதிக்கும் எல்லை வரை மட்டுமே செல்ல வேண்டும். பாதுகாப்பு வளையத்தை தாண்டி செல்லக்கூடாது என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில்  கல்லணை,  திருவையாறு கும்பகோணம் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு தினத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கும் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில்  படித்துறைகள் இல்லாத, பாதுகாப்பு இல்லாத  52 இடங்களில் ஆடிப்பெருக்கு நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது . மற்ற இடங்களில் மக்கள் கவனமாக, பாதுகாப்புடன் விழா கொண்டாடும்படி கேட்டுக்கொள்வதாக  கலெக்டர் அறிவித்து உள்ளார்.  அதுபோல வரும் 4ம் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும்  பக்தர்கள் காவிரியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார். படித்துறை இல்லாத, அதிக வெள்ளம் பாயும் பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக கலெக்டர்  அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!