திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சி
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக
தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சியை இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இழக்க நேரிடும் மேலும் அரசு மானியங்கள் கிடைப்பதிலும் தொகுப்பு வீடுகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கடந்த இரண்டு நாட்களாக வயலூர் சாலை சோமரசம்பேட்டையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கிராம மக்கள் அதுவத்தூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நுழைவாயிலின் கதவிற்கு முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கதவை திறந்து கொண்டு பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் மற்றும் ஜீயபுரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கருப்பு
கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாய சங்க தலைவர் மா.பா.சின்னதுரை உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.