திருச்சி அரிஸ்டோ அருகே வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை. சென்னை பைபாஸ் சாலை -திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையிலும், திண்டுக்கல் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கும், ரயில் நிலையத்துக்கும் செல்லும் வகையிலும் இந்த பாலம் 4 முனை வழித்தடமாக அமைக்கப்பட்டது.
இதில் சென்னை பைபாசை இணைக்கும் சாலை மட்டும் , இணைப்பு சாலைக்கான இடம் கிடைக்காமல் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்த இடம் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அதை பெறுவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் திமுக அரசு, மத்திய பாதுகாப்புத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை பெற்ற பின் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு திண்டுக்கல் சாலை-சென்னை பைபாஸ்
இணைப்பு சாலை உருவானது.
அதைத்தொடர்ந்து இன்று அந்த சாலையின் துவக்க விழா நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று காலை இதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதையொட்டி பாலம் நேற்று முதல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் , மாநகராட்சி மேயர் அன்பழகன்,மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ,மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் கிருஷ்ணசாமி கோட்டப்பொறியாளர்கள் கேசவன் , முருகானந்தம் , உதவி கோட்டப் பொறியாளர் சத்தியன், வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பாலம் திறக்கப்பட்டவுடன் அதில் போலீஸ் வாகனங்கள், அதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.