திருச்சி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.02 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து,இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம், சனிக்கிழமை புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது, அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடமை களுக்குள் 435 வெளிநாட்டு பணத்தாள்களை (கரன்சி) மறைத்து வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.3,72,697 ஆகும். அதேபோல ரூ. 30,000 மதிப்பிலான 500 ரூபாய் பணத்தாள்களையும் மறைத்து கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றுக்கான முறையான அனுமதியேதும் அவர் பெறவில்லை. இதனையடுத்து, மொத்தம் ரூ. 4, 02, 697 மதிப்பிலான பணத் தாள்களை சுங்கத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.