சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையத்தை அமைத்துள்ளது. இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா ஜனவரி 2ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைத்தார். தொடர்ந்து, மதுரை – தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய முனையத்தில் 60 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 45 பயணிகள் வரை கையாள முடியும். இந்த விமான நிலையத்தில் இருந்து ஏற்கனவே 10 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் விமான சேவை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரும்படி இட
வசதிகள் உள்ளன. 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. புறப்பாடு – வருகை என 16 வழிகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.. முனையத்தை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும்
வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனையம் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து செல்கின்றனர்.