தமிழ்நாட்டில், சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக 3வது பெரிய விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது. பன்னாட்டு விமான நிலையமான திருச்சியில் 2வது முனையம் அமைக்க 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இதற்காக 951 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த விழா வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு 2வது முனையத்தை திறந்து வைக்கிறார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மொத்தம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த 2வது முனையமானது 2 அடுக்குகளைக் கொண்டதாக திகழ்கிறது. இதில் ஒரே நேரத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தமாக சேர்த்து 6,000 பயணிகளை கையாள முடியும் 2வது முனையத்தில் புறப்பாடு பகுதியில் 10 வாயில்களும் வருகை பகுதியில் 6 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள்,40 இமிகிரிஷேன் மையங்கள், 48 செக் இன் மையங்கள், 3 விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட், 1,000 கார் பார்க்கிங் வசதியுடன் திகழ்கிறது.
சோலார் மூலம் மின்சாரம் பெறத்தக்க வகையில் விமானநிலையத்தின் 2வது முனைய மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் 75 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
2ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்வதையொட்டி அமைச்சர் கே. என். நேரு இன்று காலை திருச்சி விமான நிலையத்தின் 2 வது முனையத்தை பார்வையிட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள்ி வரவேற்றனர். விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர் நேரு கூறியதாவது:
திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் திருச்சிக்கு பெருமையாகும். திறப்பு விழாவில் முதல்வரும் கலந்து கொள்வதால், நான் இன்று இதனை பார்வையிட வந்தேன். இன்னும் 70 ஹெக்டேர் நிலம் விமான நிலையத்துக்கு கையகப்படுத்த வேண்டி உள்ளது. அது இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார். அமைச்சருடன் கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், போலீஸ் கமிஷனர் காமினி, மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.