திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை தற்போது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து பால் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள், இலைகள், பூக்கள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக குறைந்த அளவில் ஏற்றுமதி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஓராண்டாக மீண்டும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி வழியாக மலேசியாவிற்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் கோழி முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு முதல் முறையாக கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதையொட்டி முன்னதாக நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து முட்டைகள் வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு முட்டை ஏற்றுமதியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த முட்டைகள் விமானத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 2 லட்சம் முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இந்த முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது திருச்சி மாநகர மேயர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் ஜலால்,
முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது, கார்கோ பிரிவில் மேலும் அதிக அளவில் வளர்ச்சி ஏற்பட ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.