திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.24.57 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு கடத்த இருந்த அந்த டாலர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதே போல் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மலேசியாவை சேர்ந்த அக்ரோசியா முகமது இப்ராஹிம்(வயது47) என்ற பெண் பயணியின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் மறைத்து இந்திய ரூபாயில் 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளாக மொத்தம் ரூ.21 லட்சத்தை வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் உள்பட ரூ.45 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.