திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை, வியட்நாம்,தோஹா,கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் உடைமைகளை வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது சந்தேகமான முறையில் நடந்து கொண்ட நபரை அழைத்து அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன் அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.