Skip to content

பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர்   சீனிவாசன்.  இவர்  அதிமுக ஆட்சியில்  திருச்சி  மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். பின்னர் அமமுக கட்சியில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர். தற்போது மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கும் வட்ட செயலாளர்கள் சிலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 18ம் தேதி 23 வார்டு செயலாளர்கள் சேலம் சென்று  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து  மாவட்ட செயலாளர் சீனிவாசனை மாற்ற வேண்டும் என முறையிட்டனர்.அப்போது மா. செ. சீனிவாசன் குறித்து தாங்கள் கூறும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற அனைவரும் கோரிக்கை வைத்தனர். அதற்கு எடப்பாடி அத்தனை பேரின் கோரிக்கைகளையும் தனித்தனியாக கேட்க நேரமில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் பிரச்னை என்ன என்பதை ஒரு மனுவாக எழுதி கொடுங்கள் என கூறினார். அதைத்தொடர்ந்து அனைவரும் ஒரு மனு எழுதிக்கொடுத்தனர். மேலும் அதேபோல் மனுவை அதிமுக தலைமை அலுவலகத்திலும் கொடுத்திடுங்கள் எடப்பாடி கூறியிருந்தார். தொடர்ந்து அதிருப்தியாளர்கள் அன்றைய தினமே தங்கமணி மற்றும் வேலுமணியையும் நேரில் சந்தித்து சீனிவாசனை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து 19ம் தேதி மாநகர் மாவட்ட அதிருப்தி வட்ட செயலாளர்கள் சென்னை சென்று தலைமை அலுவலகத்தில் மனுவை கொடுத்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தங்கமணி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன் அமைப்புச்செயலாளர்கள் மனோகரன், ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை முடித்து விட்டு நாமக்கல் புறப்பட்டார். அவரது கார் குடமுருட்டி பாலத்தை கடந்த சிலர் அதிமுக நிர்வாகிகள் கும்பலாக நின்று காரை நிறுத்துமாறு செய்கை காட்டினர். இதனைப்பார்த்த தங்கமணி காரை ஒரமாக  நிறுத்தினார். அப்போது தங்கமணிக்காக காத்திருந்த அதிருப்தி வட்ட செயலாளர்கள் நாங்கள் மாவட்ட செயலாளர் சீனிவாசனை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? நீங்கள் தானே மாவட்ட பொறுப்பாளர் எங்களுக்கு ஒரு பதில் சொல்லுங்கள் என கேட்டனர். உடனேகாரில் இருந்து இறங்கிய தங்கமணி நீங்கள் உங்களது கோரிக்கையை பொதுச்செயலாளரிடம் கூறியிருக்கிறீர்கள். அவர் முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என கூறி விட்டு கிளம்பினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் தங்கமணியின் காரை மறித்து மீண்டும்கோரிக்கை வைத்துள்ள விவகாரம் திருச்சி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

error: Content is protected !!