சுமார் ஒண்ணறை ஆண்டுகாலமாக காலியாக இருந்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு கேபிள் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அந்த அறிவிப்பிற்கு ஜெ பேரவை செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சீனிவாசனை சந்திப்பதை தவிர்த்தனர். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களை கார்த்திகேயன் மற்றும் வெல்லமண்டி சண்முகம் ஆதரவாளர்கள் புறப்பணிப்பது தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் காலியாக இருந்த மாணவரணி செயலாளர் பதவி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 2 பகுதி செயலாளர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்பட்டு பட்டியல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட இம்ராகிம்ஷா தனக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி வாங்கித்தருவதாக மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏமாற்றி விட்டதாக போர்க்கொடி தூக்கினார். அடுத்தகட்டமாக புதியதாக நியமிக்கப்பட்ட ரோஜர் மற்றும் ராஜேந்திரன் ஆகிய பகுதி செயலாளர்கள் சீனிவாசனுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றும் தகுதியில்லாதவர்களுக்கு பகுதி செயலாளர் வழங்கப்பட்டு விட்டதாகவும், சீனிவாசனின் உறவினராக பரத் என்பவருக்கும் பதவி வழங்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். மேலும் தங்களுக்கு தெரியாமல் வார்டுகள் பிரிக்கப்பட்டு விட்டதாக ஒட்டு மொத்தமாக பகுதி செயலாளர்கள் போர்க்கொடி தூக்கினர். . இதன் எதிரொலியாக தனித்தனி கோஷ்டியாகளாக அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி, திருச்சி பொறுப்பாளர் தங்கமணி மற்றும் வேலுமணியை தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் கார்த்திகேயன் தான் காரணம் என சீனிவாசன் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயனின் தம்பியும் திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான அரவிந்தனுக்கு ஜெ பேரவை துணை செயலாளர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியானது. மேலும் மாநகர் மாவட்ட ஜெ பேரவைக்கு துணைத்தலைவர்களாக திருநாவுகரசு, பொன்ராஜ், மாவட்ட இ ணை செயலாளர்களாக கங்கை மணி, மாவட்ட துணை செயலாளராக மணிகண்டன் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது. பதவிக்கு வந்த அனைவரும் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள். கார்த்திகேயனின் தம்பிக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் வந்தது மாவட்ட செயலாளர் சீனிவாசன் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது… இது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில் கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக முன்னாள் கோட்டத்தலைவர் ஞானசேகரன் அறிவிக்கப்பட்டார். அது குறித்த தகவலும் மாவட்ட செயலாளருக்கு தெரியாது. அவரும் எழுதி கொடுக்கவில்லை. அந்த முறை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் திருகுமரன் பரிந்துரையில் அந்த பதவி வழங்கப்பட்டது. தற்போது மாவட்ட ஜெ பேரவை செயலாளர் கார்த்திகேயன் தனது செல்வாக்கை பயன்படுத்தி நிர்வாகிகளை வாங்கியிருக்கிறார்… ஏற்கனவே மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பாக இருக்கும் நிலையில் மேலும் சில நிர்வாகிகள் அவருக்கே தெரியாமல் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் திருச்சி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அடுத்த சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் தொண்டர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது..