Skip to content

அதிமுக மா. செயலாளரை கண்டித்து, திருச்சியில் சுவரொட்டி

  • by Authour

முன்னாள் முதல்வர்   ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்,  அதிமுக கோஷ்டி சண்டை    தமிழ்நாடு முழுவதும்  தலைவிரித்தாடுகிறது.  உயர்மட்டத்தில் இருந்து  கடைசி பதவியான  வார்டு செயலாளர் பதவி வரை   கோஷ்டி பூசல், கோள் மூட்டுதல்,    பதவியை பறிக்க  மொட்டை பெட்டிசன் போடுதல் என  உட்கட்சி பூசல் சந்தி சிாிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

திருவிளையாடல்  திரைப்பட வசன பாணியில்  இப்போது சொல்ல வேண்டுமானால்,  பிரிக்க முடியாதது என்ற கேள்விக்கு,

அதிமுகவும், கோஷ்டி சண்டையும் என்ற  பதில் தான் சரியாக இருக்கும்.  அப்படி ஒரு  கோஷ்டி பூசல்  அதிமுகவில் நிலவுகிறது.

அதிலும் குறிப்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இந்த கோஷ்டி சண்டை  கடந்த  ஒருவருடத்திற்கு மேலாக  உச்சகட்டத்தில் இருக்கிறது. இங்குள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர்   ஜெ. சீனிவாசனுக்கு எதிராக  வரிந்து கட்டி நிற்கிறார்கள்.  இவரை மாற்ற வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பலமுறை மனு போட்டும், நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஆனாலும் எதிர்கோஷ்டி விடுவதாக இல்லை. இப்போது  திருச்சி மாநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதில் மாவட்ட செயலாளர் ஜெ . சீனிவாசனுடன் சேர்த்து எடப்பாடியையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்கள்.

அஇஅதிமுகவில் கட்சி பதவி வேண்டுமா? என்ற தலைப்பிட்டு  வெளியிடப்பட்டுள்ள அந்த சுவரொட்டில் கூறியிருப்பதாவது:

 

அஇஅதிமுகவில் கட்சி பதவி வேண்டுமா?

தேவையான தகுதிகள்:

பணம்(ATM), விட்டுப்போன உறவுகள், மாமனார் உறவுகள்,

சாதி மாற்றம், பெயர் மாற்றம் செய்து பதவி வழங்கியது போல் வழங்கப்படும்,

கட்சி பொதுக்கூட்டம், போராட்டம், கொடியேற்று விழா, மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் நடத்தியோ, கலந்தோ இருக்க கூடாது

மாற்று கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடு நல்ல தொடர்பில் இருக்க வேண்டும

குறிப்பு : கட்சிக்கு துரோகம் செய்திருத்தல் வேண்டும்

மாண்புமிகு புரட்சி தமிழர் பொதுச்செயலாளர்

டாக்டர்.எடப்பாடியார் அவர்களை,  J.சீனிவாசன்ஆகிய நான் கேவலமாக திட்டியது போல் மிக கேவலமாக திட்டுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

அணுகவும்,

J.சீனிவாசன்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அ.இ.அண்ணா.தி.மு.கழகம்

வேதனைகளை வெளிகாட்ட துடிக்கும் கழகத்தின்

நிர்வாகிகள் மற்றும் உண்மை தொண்டர்கள்

திருச்சி மாநகர் மாவட்டம் அ.இ.அண்ணா.தி.மு.கழகம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த  சுவரொட்டியை ஒட்டியது யார் என்றும், அச்சிட்டது எங்கே என்றும் சுவரொட்டியில் இல்லை.  ஆனாலும் உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு என்பது போல, இந்த சுவரொட்டியை ஒட்டியது இவர்கள் தான் என்று  மாவட்ட செயலாளருக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சுவரொட்டி போர் இத்துடன் முடிவுக்கு வருமா, அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.

error: Content is protected !!