அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பு சுவர், கட்டிமுடித்த சில மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தரமில்லாமல் இந்த தடுப்பு சுவர் கட்டியது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியின்போது கம்பரசம்பேட்டையில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுபோல, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடத்தில் தரமான தடுப்பணை கட்டவேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு நம்பர் 1 டோல்கேட்டில் திருச்சி புறநகர் வடக்கு, மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான புதுக்கோட்டை சி .விஜயபாஸ்கர் தலைமையில், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.