திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ப.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா அமைச்சர் நேரு, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசினார். இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் ஏ.தினகரன் அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் சுரேஷ் குப்தா மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதியம் வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வழியில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சொந்த ஜாமீனில் சுரேஷ் குப்தா விடுவிக்கப்பட்டார்.