திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (28). நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்திருந்தார். இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்க காயத்ரி அவரை டூவீலரில் அருகே உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து சென்றார். அவர்களுடன் காயத்ரியின் மகள் யாஷிகாவும் சென்றார். அப்போது முத்தரசநல்லூர் ரெயில்வே கேட் அருகே திருச்சி – கரூர் பைபாஸ் ரோட்டை கடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்த 3 பேருமே கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு காயத்ரி, யாஷிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டூவீலரில் மோதிவிட்டு சென்ற சரக்கு வாகனத்தை விரட்டி சென்று பிடித்தனர். இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.