திருச்சி மாநகரில் சாஸ்திரி ரோடு மற்றும் தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சவர்மா விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் ஸ்ட்ரீட் அரேபியா,அற்புத பவன், டிமேரா உள்பட சுமார் 21 உணவு விடுதிகளில், இன்று அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் பொன் ராஜ், செல்வராஜ், வசந்தன், இப்ராஹிம், ரங்கநாதன், ஐஸ்டின், வடிவேல் ,அன்பு செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன சிக்கன்கள் பறிமுதல் செய்து பினாயில், ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வின் போது அந்த பகுதியில் உள்ள பிரபல ஜூஸ் கடை ஆய்வு செய்யப்படட்து. அந்த கடையில் சுமார் 50 கிலோ அழுகிய பழங்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த அழுகிய பழங்களை கைப்பற்றி
அழித்தனர். அழுகிய பழங்களில் ஜூஸ் தயாரித்த கடைக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது .
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறியதாவது….
ஷவர்மா கோழி இறைச்சி ,கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஆய்வின் போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சிகளோ வேறு கெட்டு போன உணவு பொருட்களோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக வாடிக்கையாளர்கள் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும், இது போன்று கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் நலக் கோளாறு ஏற்படும், திருச்சி மாநகரில் தொடர்ந்து அசைவ உணவுக் கடைகளில் சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் கெட்டு போன இறைச்சிகள் விற்பனை செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 9944959595, 9585959595 நம்பரை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
சவர்மா சாப்பிட்டு நாமக்கல் அருகே ஒரு மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அதிகாரிகள் இப்போது விழிப்படைந்து ஓட்டலில் சோதனையை தொடங்கி உள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடந்தால் நல்லது. இது போட்டோ செசனுக்காக, தங்கள் ரிக்காடுக்காக நடத்தப்பட்டால் இதனால் எந்த நன்மையும் இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.