திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை செய்து வந்த நிலையில் சொத்தின் உரிமையாளரான பழனிச்சாமி பிள்ளை டிரஸ்டின் பொறுப்பாளர்கள் சென்னையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு திமுகவைச் சேர்ந்த மணிகண்டம் யூனியன் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனும் அவரது உறவினர் செந்தில்குமாரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கர் சொத்தினை அபகரித்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத புகாரின் பேரில் புங்கனூர் பஞ்சாயத்து ஆபீஸில் வேலை செய்த ராஜேந்திரன் என்பவரை சொத்தின் உரிமையாளர் மகன் போல சித்தரித்து அவரது பெயர் வெங்கடாசலம் என மாற்றம் செய்து அந்த பெயரில் போலி ஆதார் கார்டு மற்றும் சொத்தின் உரிமையாளர் இறந்ததற்கு போலி இறப்பு சான்றிதழ், போலி வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை தயார் செய்து திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பத்திரத்தை ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
மேற்படி பத்திரம் பதிவு செய்த விபரம் அறிந்து சொத்தின் ட்ரஸ்ட்டிகளில் ஒருவரான ரமா கார்த்திகேயன் அளித்த கொடுத்த புகாரின் பேரில் திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (ரூரல்) காவல் துணை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் மேற்படி போலி பத்திரமானது புங்கனூர் பஞ்சாயத்து ஆபீஸில் பணி செய்த ராஜேந்திரன் அவர்களை பஞ்சாயத்து தலைவர் தமோதரன் மற்றும் பல்வேறு நபர்கள் துணையோடு போலி ஆவணத்தை தயார் செய்து நிலத்தை அபகரித்ததை குற்ற எண் 16/2023 என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ராஜேந்திரன் என்கின்ற வெங்கடாசலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு புங்கனூர் பஞ்சாயத்து தலைவர் தாமோதரன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ராணுவ வீரர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தையும் போலி பத்திரம் மூலம் அபகரித்து உள்ளார் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாததால் ஊரில் அசாதாரண நிலை நிலவுகிறது என புங்கனூர் பொதுமக்கள் புகார் அளித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த புதன்கிழமை அன்று தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டம் 1994 பிரிவு 203ன் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனின் அதிகாரம் பறிக்கப்பட்டதாக அதிரடி உத்தரவை வெளியிட்டார்.
தாமோதரன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற பின் புங்கனூரில் சுமார் 30 ஏக்கர் இடங்களை மிரட்டி வாங்கி உள்ளார் .
தாமோதரன் தலைமறைவாக இருப்பதாக கூறினாலும் உள்ளூரில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.