திருச்சி சந்துக்கடையையை சேர்ந்தவர் ஜோசப்(43) தனது வீட்டிலேயே நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் மூக்குத்தி, தோடு உள்ளிட்ட நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார். இந்த நிலையில் ஜோசப் வேதாத்திரி நகரில் புதிதாக வீடு கட்டி உள்ளார்.
சந்துகடையில் இரவு 10 மணி வரை வேலை செய்து விட்டு பின்னர் வேதாத்திரி நகர் வீட்டுக்கு சென்ற இரவில் தங்குவார். கடந்த 25ம் தேதி இரவும் 10 மணிக்கு வேலை முடிந்ததும் ஜோசப்பும், அவரது மனைவி ஏஞ்சல் மேரியும் புதிய வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் காலை ஜீவா என்பவர் போன் செய்து ஜோசப்புக்கு பேசினார். அப்போது சந்துக்கடையில் உள்ள வீடு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதனால் ஜோசப் பதறியடித்து ஓடிவந்தார். அப்போது வீட்டில் ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், பூ மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும் போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் திருடப்பட்டு
இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 1 கிலோ இருக்கும் என்றும், மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் இருக்கும் ‘
இது குறித்து ஜோசப் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் காலை 8.30 மணிக்கு புகார் செய்தார். மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக துப்புதுலக்கி வந்தனர். இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் புலன்விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை செய்ததில், குற்றவாளிகளின் முகங்கள் சில இடங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதன் பேரில் 2 பேரை தேடி வந்தனர். அவர்கள், படங்கள் ஏற்கனவே திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசின் பதிவேடுகளில் இருந்தது. எனவே குற்றவாளிகள் கருவாட்டுப்பேட்டை, பரணிக்குமார்(23), பாலக்கரை வேர்ஹவுஸ் சரவணன்(22)என உறுதி செய்த நிலையில் அவர்களை தேடத்தொடங்கினர். இதில் பரணிக்குமார் சிறையில் இருந்து வந்து 2 நாள் தான் ஆகிறது. எனவே அவர் தான் கைவரிசை காட்டியிருப்பார் என போலீசார் முடிவு செய்து தேடத் தொடங்கினர்.
இவர்கள் மீது திருச்சி மாநகர போலீசில் பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது. பரணிக்குமார் மீது மட்டும் 19 வழக்குகள் உள்ளன. சரவணன் மீது 3 வழக்குகள் உள்ளன. எனவே அவர்களை சல்லடைப்போட்டு தேடியபோது இருவரும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் பதுங்கி இருந்தபோது அவர்கைள கைது செய்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பரணிக்குமார் வீட்டில் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜோசப் காலை 8.30 மணிக்கு புகார் செய்தார். பகல் 12.30 மணிக்கு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை போலீசார் மீட்டனர். 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி ,கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா, மற்றம் தனிப்படையினரை திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பாராட்டினார்.