தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் உள்ள தனியார் நகைக் கடைக்கு திருநங்கைகள் சிலர் நன்கொடை பெறுவதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றனர். ஆனால், திருநங்கைகளை கடைக்குள் செல்ல செக்யூரிட்டி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், திருநங்ககைள் செக்யூரிட்டியிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பும் நடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தியதையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனராம். இந்நிலையில் அந்த திருநங்கைகள் அந்த நகைக் கடை செக்யூரிட்டியிடம் நேற்று மாலை மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த திருநங்கைகளை மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, திருநங்கைகளின் தலைவி இனியா மேற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, போலீஸ் டார்ச்சரால் தீக்குளித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். உடன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் உடனடியாக இனியா மீது தண்ணீரை ஊற்றி, அவரை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.