திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது. திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.
பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் என திருச்சி நகரமே தன்னை முழுவதுமாக இயக்கி கொண்டிருந்தது. மக்களும் பரபரப்புடன் தங்கள் பணிகளை நோக்கி பறந்து கொண்டிருந்த நேரத்தில் தான் போலீஸ் வாகனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
போலீஸ் வாகனங்கள் குட்ஷெட் ரோடு ரயில்வே லைனை நோக்கி சென்றது. வாகனங்களில் இருந்து ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார், பேரிடர் மீட்பு படையினர் பரபரப்புடன் இறங்கினர். அங்கு நாம் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.
ரயில் தடம் புரண்டு கிடந்தது. ஒரு பெட்டியின் மீது இன்னொரு பெட்டி சவாரி ஏறி நிற்பது போல கோரமான காட்சி.
பேரிடர் மீட்பு படையினர் ரயில் பெட்டிக்குள் இருந்து சிலரை மீட்டு இன்னொரு ரயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தனர். ஆம்புலன்சும் புறப்பட தயார் நிலையில் ஒலிஎழுப்பிக்கொண்டு பெரிய விபத்துக்கான சமிக்ஞைகளை எழுப்பிக்கொண்டு இருந்தது.
ரயில் தடம் புரண்டு விட்டது. பயணிகள் என்ன ஆனார்களோ என பதறியபடி அருகே சென்றபோது தான் அது விபத்து மீட்பு பணி ஒத்திகை என்பது தெரியவந்தது. எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்யவேண்டும். பயணிகளை மீட்டு, அவர்களுக்கு எப்படி முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றுவது என ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது.
உண்மையிலேயே விபத்து ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தத்ரூபமாக செய்து காட்டிக்கொண்டிருந்தனர் திருச்சி ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும்.