விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியது. சற்று நேரத்தில் கடல்நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. இந்த வினோத காட்சியை மீனவர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் ‘நீர்த்தாரைகள்’ எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த வினோத நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இந்த நிகழ்விற்கு ஆங்கிலத்தில் “டோர்னடோ” என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் தோன்றும்’ என்றார். மரக்காணம் கடல் பகுதியில் நடந்த இந்த அதிசய நிகழ்வு மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.