தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த ஜூன் கடைசி வாரத்தில் இருந்து தக்காளி விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. ஜூலை கடைசி வாரத்தில் தக்காளி உச்சத்திற்கு சென்றது. அதாவது சென்னையிலும், கிராமப்புறங்களிலும் கிலோ 200 ரூபாய் வரை விற்றது. வட மாநிலங்களில் கிலோ 250ஐ தாண்டி கீழே இறங்க மாட்டேன் ஆட்டம் போட்டது. தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு கிலோ 60 ரூபாய்க்கு ரேஷன்கடைகளில் தக்காளி விற்பனை செய்தது. ஆனாலும் போதுமான அளவு தக்காளி வரத்து இல்லை.
இதனால் மக்கள் தக்காளி பயன்பாட்டை குறைக்கத்தொடங்கினர். ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி மாயமானது. விலை எப்போதுதான் குறையும்? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்தபடி இருந்தனர். வட மாநிலங்களில் மழை வெள்ளம் ஓரளவு குறைந்த நிலையில், தக்காளி வரத்து தொடங்கியது. இதனால் விலை இறங்க தொடங்கியது.
கடந்த 6 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் முதல் தர தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் ரூ.60க்கும், மூன்றாம் தரம் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முசிறி வாரச்சந்தையில் முதல் தர தக்காளி கிலோ 80க்கு விற்பனையானது. திருச்சி காந்தி மார்க்கெட்டிலும் இன்று தக்காளி விலை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையானது.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து ஓரளவுக்கு அதிகரித்து இருப்பதால், அதன் விலை குறைந்து வருவதாகவும், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற காய்கனிகளும் விலை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இஞ்சி கிலோ 210க்கும், பூண்டு முதல்தரம் ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.