ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு இணையாக தக்காளியும் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்றது. வெளிமாநிலங்களில் 250 ரூபாய், 300 ரூபாய் என விற்பனையானது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தக்காளியை வாங்கிக்கொண்டு வரும் அளவுக்கு நிலைமை போனது. கடந்த 2 மாதமாக தக்காளி படிப்படியாக குறைந்து இப்போது கிலோ 20 ரூபாய், 15 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
கிலோ 200 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியால் பலர் கோடீஸ்வரர்களாகவும், பலர் லட்சாதிபதிகளாகவும் உயர்ந்தனர். இதை நம்பி ஆந்திராவில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். இப்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளி காய்த்து தள்ளுகிறது.
தற்போது ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
இன்னும் 2 வாரத்தில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தக்காளி கிலோ விலை கிலோ ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்: இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தக்காளி விலை உச்சாணி கொம்பில் நின்று ஆட்டம் போட்டு, ஏழை மக்களை பாடாய் படுத்தியது. இப்போது தக்காளி விலை ரூ.2 க்கு சரிய உள்ளது. அதாவது 100 மடங்கு விலை சரிவு ஏற்பட உள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க… இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.