உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டி கடந்த 15ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 16ம் தேதி கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், நாளை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது.