கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days) கடந்த மார்ச் 6ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து ஆங்காங்கே பவனி சென்றனர்.
மறுநாள் (திங்கள்) முதல் பெரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இன்றைய வியாழக்கிழமை என்பது மிக முக்கியமான நாள். இயேசுநாதர் இன்று தான் காட்டிகொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையும்படி பிடிபட்ட நாள்.
தான் காட்டிக்கொடுக்கப்படப்போகிறதை முன்னே அறிந்த இயேசுநாதர், தனது சீடர்கள் அனைவருடனும் அமர்ந்து போஜனம் செய்தார். அப்போது அவர் சீடர்களின் பாதங்களை கழுவி, ஒவ்வொரும், தாழ்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதை போதித்தார்.
அந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை ஒவ்வொரு தேவாலயத்திலும் நடைபெறும். பாதிரியார்கள் சபைகளில் உள்ள மக்களின் பாதங்களை கழுவும் நினைவு கூர்தல் நிகழ்ச்சியும், திருப்பலிகளும் நடைபெறும்.
நாளை பகல் பொிய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் தான் இயேசுநாதர் உலகின் பாவங்களை போக்க சிலுவையில் அறையப்பட்டார். அதை நினைவு கூர்ந்து ஆலயங்களில் போதனைகள், திருப்பலிகள் நடைபெறும். இதில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து பங்கேற்பார்கள். நாளை வேளாங்கண்ணி, பூண்டி உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்ந்து திருப்பலிகள் நடைபெறும்.
சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் இயேசுநாதர் உயிருடன் எழுந்தார் என்று புனித விவிலியம் கூறுகிறது. அந்த நாளை(வரும் ஞாயிறு) உயிர்த்தெழுந்த பண்டிகையாக( ஈஸ்டர்) கொண்டாடுகிறார்கள். அதன்படி வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பார்கள்.